டிஎன்பிஎல் 2022: சேப்பாக்கை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது மதுரை பாந்தர்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.
இந்த சீசனின் முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸிடம் தோல்வியடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியது. மதுரை பாந்தர்ஸும் முதல் போட்டியிலேயே வெற்றி பெறும் முனைப்பில் இறங்கியது.
Trending
நெல்லையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கௌஷிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். சுஜய் 11 ரன்னிலும், சோனு யாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, ராஜகோபால் சதீஷ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது சேப்பாக் அணி. பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்ரீநிவாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மணிமாறன் சித்தார்த்தும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
51 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து சேப்பாக் அணி திணறிய நிலையில், 8வது விக்கெட்டுக்கு உத்திரசாமி சசிதேவும் ஹரிஷ் குமாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர்.
ஹரிஷ் குமார் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக பேட்டிங் ஆடிய உத்திரசாமி சசிதேவ் அரைசதம் அடித்தார். 43 பந்தில் 58 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 5வது பந்தில் தான் ஆட்டமிழந்தார் உத்திரசாமி. அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 135 ரன்கள் அடித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
இதையடுத்து 136 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மதுரை பாந்தர்ஸ் அணியில் பாலசந்தர் அனிருத் பொறுப்புடன் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 58 ரன்கள் அடித்தார். அவரது சிறப்பான பேட்டிங்கால் மற்ற வீரர்கள் சொதப்பியபோதிலும், இலக்கு எளிதானது என்பதால் 19ஆவது ஓவரில் இலக்கை அடித்து மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now