மகாராஜா கோப்பை 2023: மைசூர் வாரியர்ஸை வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன்!
மைசூர் வாரியர்ஸ் அணிக்கெதிரான மகாராஜா கோப்பை டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் ஹூப்ளி டைகர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்கான டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக டிஎன்பிஎல் நடத்தப்படுவது போல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக மகாராஜா கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களாக பெங்களூரில் நடைபெற்று வந்தது.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் மனிஷ் பாண்டே தலைமையிலான ஹூப்ளி டைகர்ஸ் அணியினர் வெற்றி பெற்று மகாராஜா கோப்பையை கைப்பற்றினர்.
Trending
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் லுவித் சிசோதியா துவக்கத்திலேயே விரைவாக ஆட்டம் இழந்த போதும் முகமது தாஹா மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்ரீஜித் 38 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், முஹம்மது தாஹா 40 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஆட வந்த கேப்டன் மணிஷ் பாண்டே நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தது ஹூப்ளி டைகர்ஸ் அணி.
இதனைத் தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியினருக்கு தொடக்க வீரர்களான கார்த்திக் மற்றும் சமர்த் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் கார்த்திக் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சமர்த் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதன்பின் அணியின் கேப்டன் கருண் நாயர் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மைசூர் அணி 20 ஓவர்களில் 195 ரன்கள் எட்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் ஹூப்ளி டைகர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மைசூர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பாண்டிற்கான மகாராஜா கோப்பை டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக மனீஷ் பாண்டேவும், தொடர் நாயகனாக முகமது தாஹாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Win Big, Make Your Cricket Tales Now