SA vs IND, 2nd Test: அதிரடியில் மிரட்டிய புஜாரா; இந்திய அணி முன்னிலை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையே ஜோஹன்னஸ்பர்க்கில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரமை 7 ரன்னுக்கு வெளியேற்றினார் ஷமி. அதன்பின்னர் கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். எல்கரும் பீட்டர்சனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
Trending
2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவர்கள் இருவரும், பும்ரா, ஷமி ஆகிய பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு கவனமாக ஆடினர். அதனால் எல்கர் - பீட்டர்சன் ஜோடியை பிரிப்பது சவாலான காரியமாக இருந்தது.
இதையடுத்து பந்துவீச வந்த ஷர்துல் தாக்கூர் தனது 2ஆவது ஓவரிலேயே எல்கரை 28 ரன்னில் வெளியேற்றி பிரேக் கொடுத்தார். களத்தில் நங்கூரமிட்டு அரைசதம் அடித்திருந்த பீட்டர்சனையும் 62 ரன்னில் வீழ்த்தினார் தாகூர். வாண்டெர் டசனை வெறும் ஒரு ரன்னில் வீழ்த்தி முதல் செசனை முடித்தார் தாகூர். முதல் செசன் முடியும் தருவாயில் டசனை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.
அதன்பின்னரும் ஷர்துல் தாகூருக்கே விக்கெட்டுகள் கிடைத்தன. டெம்பா பவுமாவும் கைல் வெரெய்னும் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அந்த ஜோடியையும் ஷர்துல் தாகூர் தான் பிரித்தார். 21 ரன்னில் வெரெய்னை வீழ்த்திய ஷர்துல் தாகூர், அரைசதம் அடித்த டெம்பா பவுமாவையும் 51 ரன்னில் வீழ்த்தினார்.
இதனால் முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்க அணி. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட் வீழ்த்தினார்.
அதன்பின் 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கேப்டன் கேஎல் ராகுல் 8 ரன்னிலும், மயங்க் அகர்வால் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த் புஜாரா - ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை முன்னிலைப் படுத்தியது. அதிலும் குறிப்பாக பொறுமையை கடைபிடிக்கும் புஜாரா, இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்தது. இதில் புஜாரா 35 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 58 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now