
உலகப்புகழ் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கி 2ஆவது வாரத்தைக் கடந்துள்ளது.
இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. வரும் மே 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.
அதிலும் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க அனைத்து அணிகளும் முழு மூச்சுடன் மோதி வருகின்றன. அப்போது தான் அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.