
பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அதில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய 9ஆவது லீக் போட்டியில் 5 முறை கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிஒய் பாட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் தொடக்க வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 1 ரன்னில் ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த நிலையில் அடுத்து வந்த டேவூட் படிக்கல் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் 48/2 என்ற ஓரளவு சுமாரான தொடக்கம் பெற்ற ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில் அடுத்ததாக களமிறங்கிய அதன் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்களைக் குவித்த இந்த ஜோடி மும்பை பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ராஜஸ்தான் அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தபின் பிரிந்தது. இதில் 21 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி மற்றும் 3 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 30 ரன்கள் எடுத்திருந்தபோது முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.