
கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அரையிறுதி போட்டிகளும், நாளை(15ஆம் தேதி) இறுதி போட்டியும் நடக்கவுள்ளன. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடச்சென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு செப்டம்பர் 18 வரை அங்கிருந்து ஆடுவதற்கு, தடையில்லா சான்று வழங்கியிருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுவதற்காக அணியின் சீனியர் ஆல்ரவுண்டரான முகமது ஹஃபீஸை உடனடியாக நாடு திரும்புமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவுறுத்தியது.
தனக்கு செப்டம்பர் 18 வரை வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றை சுட்டிக்காட்டி, கரீபியன் பிரீமியர் லீக்கை முடித்துவிட்டு வர அனுமதி கோரினார் முகமது ஹஃபீஸ். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, உடனடியாக பாகிஸ்தான் வருமாறு அழைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 12ஆம் தேதி பாகிஸ்தானுக்கு சென்றார் முகமது ஹஃபீஸ்.