
கடந்தாண்டு நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களில் பாகிஸ்தான் அணி படு தோல்வியைச் சந்தித்தது. இதனால் அந்நாட்டின் கிரிக்கெட் தேர்வாளர் பதவியிலிருந்து இன்சமாம் உல் ஹக் உலகக்கோப்பை தொடர் முடிவடைவதற்கு முன்னதாகவே பதவி விலகினார். இதைத்தொடர்ந்து உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் ஆசாம் விலகினார்.
இதையடுத்து பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் அஃப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூதும் நியமிக்கப்பட்டனர். அதேசமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜகா அஷ்ரஃப் தலைமையிலான நிர்வாக குழு அப்போதைய இயக்குநர் மிக்கி ஆர்தர் தலைமையிலான பயிற்சி குழுவை நீக்கிவிட்டு அவர்களை தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு மாற்றியது. எனினும் அவர்கள் புதிய பதவியை ஏற்காமல் ராஜிநாமாச் செய்துவிட்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வியைத் தழுவியது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைராக இருந்த ஜகா அஷ்ரஃப் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மோஹ்சின் ரஸா நக்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.