
ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ள வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு பிசிசிஐ இரட்டை விருந்துகளை கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு ஒரு இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணத்திற்கு ஒரு இந்திய அணி என 2 வெவ்வேறு அணிகளைக் கொண்டு அடுத்த மாதம் முழுவதும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த முடிவு செய்துள்ளது.
இதில் இலங்கை அணிக்கெதிரான இந்திய அணியில் இந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய சிஎஸ்கே பவுலர் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என கடும் போட்டி இருப்பதால் தீபக் சஹாருக்கு அவ்வளவாக சர்வதேச போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கான மிகப்பெரிய வாய்ப்பாக இலங்கை தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எந்த ஒரு வீரரும் எனக்கு கொடுக்காத வாய்ப்பை சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி எனக்கு கொடுத்து, எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துள்ளார் என தீபக் சஹார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.