
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, குஜராத் அணிகள் அபாரமாக விளையாடி, வெற்றிகளை குவித்து வரும் நிலையில் 5 முறை சாம்பியனை கைப்பற்றிய அணியாக திகழ்ந்து வந்த மும்பை இந்தியன்ஸ் படுமோசமாக சொதப்பி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த போட்டியிலும் தோற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்.
அந்த அணியில் பேட்ஸ்மேன்கள் எல்லாம் சிறப்பாகத்தான் விளையாடி வருகிறார்கள். இருப்பினும் பந்துவீச்சுதான் மிகவும் சுமாராக இருக்கிறது. நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை அவர்கள் வாங்கியிருந்தாலும், காயம் காரணமாக அடுத்த சீசன் முதல்தான் களமிறங்க உள்ளார். டைமல் மில்ஸ், பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ் போன்றவர்கள் சொதப்பல் பந்துவீசுவதால், பும்ராவும் நெருக்கடியில் பந்துவீசி, சில நேரங்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்.
குறிப்பாக பாசில் தம்பி, சாம்ஸ் இருவரும்தான் தொடர்ந்து அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். இந்த இருவரையும் நம்பி களமிறங்குவது என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம்தான். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், மும்பை அணியின் பந்துவீச்சு துறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.