இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர், இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் அறிமுகமாவதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இஷான் கிஷன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, சேத்தன் சக்காரியா, நிதிஷ் ராணா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றனர்.
சாஹல் - குல்தீப் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சு ஜோடி 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக இணைந்து ஆடும் வாய்ப்பையும் பெற்றனர். இந்த டி20 தொடர் இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் என்பதால், இந்த தொடரில் ஆடிய வீரர்கள் குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது.
வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல்லில் அவர் சிறப்பாக பந்துவீசிவருகிறார். அதனால் அவர் குறித்த பேச்சும் இருக்கிறது. இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கு முன்பாக, டி20 உலக கோப்பை நடக்கும் அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளும் நடக்கவுள்ளன. எனவே ஐபிஎல் தொடர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.