Advertisement

NED vs PAK, 3rd ODI: நசீம் ஷா, முகமது வாசிம் அபாரம்; நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!

நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 21, 2022 • 22:26 PM
NED vs PAK, 3rd ODI:Pakistan edge Netherlands in a thriller in Rotterdam
NED vs PAK, 3rd ODI:Pakistan edge Netherlands in a thriller in Rotterdam (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக்  2 மற்றும் ஃபகர் ஸமான் 26 ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய பாபர் ஆசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அகா சல்மான் 24, குஷ்தில் ஷா 2, முகமது ஹாரிஸ் 4 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Trending


ஒருமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 91 ரன்களை குவித்தார். 9 ரன்னில் சதத்தை தவறவிட்டு 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பாபர் ஆசாம். பின்வரிசையில் முகமது நவாஸ் 27 ரன்கள் அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட் 3 ரன்களிலும், முசா அஹ்மத் 11 ரன்னிலும், பஸ் டி லீட் 5 ரன்களோடும் பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த விக்ரம் ஜித் சிங் - டாம் கூப்பர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதிலும் டாம் கூப்பர் இந்த தொடரில் தொடர்ச்சியாக அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின் அரைசதம் கடந்த கையோடு விக்ரம்ஜிட் சிங் ஆட்டமிழக்க, மறுமுனையில் 62 ரன்களைச் சேர்த்திருந்த டாம் கூப்பரும் முகமது வாசிம் ஜூனியர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர்.

இதனால் 49.2 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய நசீம் ஷா 5 விக்கெட்டுகளையும், முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement