
நெதர்லாந்தில் அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன், கனடா பேட்டிங் செய்யவும் அழைத்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஜான்சன், ராயன் பதான் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் 13 ரன்களுக்கும், ஹர்ஷ் தாகெர் 10 ரன்களுக்கும், பிரவீன் குமார் 4 ரன்களுக்கும், ரவீந்தர்பால் சிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, கனடா அணியானது 35 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் மொவ்வா - சாத் பின் ஸஃபர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் மொவ்வா 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாத் பின் ஸஃபர் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் கனடா அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கைல் கெலின், பால் வான் மீகெரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.