
உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க உதவும் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அதை தொடர்ந்து இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்தது.
அதனால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களுடைய அணியை அறிவித்த நிலையில் ஐசிசியிடம் நேரடியாக சமர்ப்பித்த தங்களுடைய 15 பேர் அணியை நியூசிலாந்து இன்று தான் வெளியிட்டுள்ளது. பொதுவாக அறிக்கை அல்லது தேர்வு குழுவினர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்து தங்களுடைய அணியை வெளியிடுவதே வழக்கமாகும். ஆனால் அவற்றை தாண்டி தனித்துவமாக செயல்பட்ட நியூசிலாந்து தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை அதில் இடம் பிடித்த வீரர்களின் குடும்பங்களின் வாயால் வெளியிட்டுள்ளது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அதில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகரான திறமையுடன் அசத்தி வரும் அவர் கடந்த 2019 உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை ஃபைனல் வரை சென்று ஆட்டநாயகன் விருது வென்றார்.