டி20 உலகக்கோப்பை: பிரபல நியூசிலாந்து வீரருக்கு காயம்!
பிரபல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் காயம் காரணமாக முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் இன்று முதல் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.
இதையடுத்து வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது டேரில் மிட்செல் விரலில் பந்து பட்டு அதன் காரணமாக எலும்புமுறிவு ஏற்பட்டது.
Trending
இதையடுத்து முத்தரப்பு டி20 தொடரிலிருந்து டேரில் மிட்செல் விலகியுள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.
கடந்த 2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 சதங்களுடன் 538 ரன்கள் எடுத்தார்.
மேலும் கடந்த 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு விளையாடிய 13 இன்னிங்ஸில் 301 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் - 144.71. நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக டேரில் மிட்செல் உள்ளதால் அவர் விரைவில் குணமாகி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
டி20 உலகக் கோப்பைப் தொடரில் அக்டோபர் 22 அன்று ஆஸ்திரேலியாவை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now