
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வென்ற நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டப்ளினில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து அயர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங் ரன் ஏதுமின்றியும், கேப்டன் பால்பிர்னி 2 ரன்களிலும், கடந்த போட்டியில் சதம் விளாசிய ஹேரி டெக்டர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஆண்டி மெக்பிரைன் 28, காம்பெர் 25, லோர்கன் டக்கர் 19, சிமி சிங் 16 என அடுத்து வந்த வர்களும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.