டிராவிட் - கோலி சாதனையை முறியடித்த கான்வே - மிட்செல் இணை!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் டெவான் கான்வே - டெரில் மிட்செல் இணை 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப் படைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி முதலில் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 2-2 என்று டி20 தொடரானது சமனானது. இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் விளையாடி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 291 ரன்கள் எடுத்தது. இதில், மலன் 54 ரன்களும், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பென் ஸ்டோக்ஸ் 52 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 52 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு 292 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து பேட்டிங் ஆடியது. இதில் வில் யங் 29 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹென்றி நிக்கோலஸ் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு இணைந்த டெவான் கான்வே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை சரமாரியாக வெளுத்து வாங்கினர்.
Trending
இதில், டெவான் கான்வே 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 111 ரன்களையும், டேரில் மிட்செல் 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் உள்பட 118 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 297 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக, 4 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதில், டெவான் கான்வே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து 3 ஆவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனையை பதிவுசெய்தனர். இதற்கு முன்னதாக கார்டிஃப் மைதானத்தில் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து 170 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது கான்வே - மிட்செல் இணை முறியடித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now