ENG vs NZ: மற்றுமொரு நியூசிலாந்து வீரருக்கு கரோனா உறுதி!
England vs New Zealand: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலிரண்டு ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. இரண்டு ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனிடையே, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதன் காரணமாக, டாம் லாதம் அணிக்குத் தலைமை ஏற்றார்.
Trending
இதைத் தொடர்ந்து, ஆல்-ரௌண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில், மற்றொரு நியூசிலாந்து வீரரான டெவான் கான்வேவுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை லண்டன் வந்தபோது கான்வே பிசிஆர் பரிசோதனை எடுத்துக்கொண்டார். அதன் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
அதேசமயம், அணியிலுள்ள மற்ற வீரர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் மாற்று வீரர் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இருஅணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் லீட்ஸில் அடுத்த வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த ஆட்டத்துக்கு முன்பு கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதி அடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now