
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் அடித்தது இலங்கை அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி டேரில் மிட்செலின் அதிரடியான சதத்தின் மூலம், 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 20 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாதா ஃபெர்னாண்டோ - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 17 ரன்களிலும், ஒஷாதா 28 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது.
அதன்பின் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜெயசூர்யா 6 ரன்களுடனும், சண்டிமல் 42 ரன்க்ளுடனும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.