
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழை பெரிய பிரச்னையாக உள்ளது. மெல்பர்னில் விடாமல் பெய்த தொடர் மழை காரணமாக இன்று ஒரே நாளில் 2 போட்டிகள் பாதிக்கப்பட்டன. மெல்பர்னில் நடக்கவிருந்த ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி ஆகிய 2 போட்டிகளும் ரத்தாகின.
க்ரூப் 1-ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணி மட்டுமே 2 போட்டிகளில் ஆடி 3 புள்ளிகளை பெற்றுள்ளது. மற்ற 3 அணிகளும் தலா 3 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், 3 புள்ளிகளை பெற்றுள்ளன. இன்னும் 2 போட்டிகள் மட்டுமே அந்த அணிகளுக்கு எஞ்சியிருப்பதால் இது பெரும் நெருக்கடி தான்.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்ற நிலையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து ஆட வேண்டிய போட்டி மழையால் ரத்தானது. அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.