
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 எனக் கைப்பற்றி அசத்தி இருக்கிறது. 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒரு கிரிக்கெட் தொடரை பரிதாபமாக இழந்திருக்கிறது.
இந்தத் தொடரில் சூரியகுமார் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா தவிர பேட்டிங் யூனிட்டில் இருந்தவர்கள் சர்வதேச அனுபவம் மற்றவர்களான இளம் வீரர்களாகவே இருந்தார்கள். அனுபவம் இன்மை அவர்களது ஆட்டத்தின் வழியாக தெளிவாகத் தெரிந்தது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதற்கு அடுத்து இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தது. நேற்றைய போட்டியில் வென்றிருந்தால் உலகச் சாதனை ஒன்றை இந்திய அணி படைத்திருக்கும்.
அதாவது முதல் இரண்டு போட்டிகளை தோற்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை எந்த அணியும் வென்றது கிடையாது. இப்படியான நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மூன்றாவது போட்டியை வென்ற பொழுது, நிக்கோலஸ் பூரன் அடிப்பதாக இருந்தால் என்னை அடிக்கட்டும். நான் இப்படியான போட்டிகளை விரும்புகிறேன். அவர் எப்படியும் நான்காவது போட்டியில் என்னை இதற்காக தொடர்ந்து வருவார் என்று கூறியிருந்தார்.