ரஞ்சி கோப்பை 2022: வரலாறு நிகழ்த்திய பெங்கால்!
ரஞ்சி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியின் டாப் 9 வீரர்களும் அரைசதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
ரஞ்சி தொடரின் லீக் போட்டிகள் ஐபிஎல்லுக்கு முன் நடந்த நிலையில், ஐபிஎல் முடிந்து நாக் அவுட் போட்டிகள் நடந்துவருகின்றன. கடந்த 6ம் தேதி முதல் காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன.
ஒரு காலிறுதி போட்டியில் பெங்கால் மற்றும் ஜார்கண்ட் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 773 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஜார்கண்ட் அணியில் விராட் சிங்(113) சதமடித்தார்; தொடக்க வீரர் நசீம் சித்திக்கி அரைசதம்(53) அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொதப்ப 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
475 ரன்கள் என்ற மெகா முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது பெங்கால் அணி. நாளைய ஒருநாள் ஆட்டம் எஞ்சியிருப்பதால் இந்த போட்டியில் பெங்கால் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பெங்கால் அணியின் டாப் 9 வீரர்களும் அரைசதம் அடித்தனர். பேட்டிங் ஆடிய 9 வீரர்களுமே குறைந்தபட்சம் அரைசதம் அடித்தனர். அபிஷேக் ராமன்(61), அபிமன்யூ ஈஸ்வரன்(65), சுதிப் கராமி(186), அனுஸ்துப் மஜும்தர் (117), மனோஜ் திவாரி(73), அபிஷேக் போரெல் (68), ஷபாஸ் அகமது(78), மாண்டல்(53*), ஆகாஷ் தீப்(53) ஆகிய 9 பேட்ஸ்மேன்களுமே அரைசதம் அடித்தனர்.
முதல் தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் டாப் 9 வீரர்களுமே அரைசதம் அடிப்பது இதுதான் முதல் முறை. முதல் தர கிரிக்கெட்டில் டாப் 9 வீரர்களும் அரைசதம் அடித்து பெங்கால் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now