
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வயிற்று வலி காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடாமல் வெளியில் அமர்ந்துள்ளார். அவருக்கு பதிலாக இந்த போட்டியில் ஹனுமா விஹாரி விளையாடினார். இருப்பினும் அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் விளையாட தயாராகி அணியில் இணைவார் என்பதனால் மிடில் ஆர்டரில் ஒரு வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிச்சயம் யாராவது ஒருவர் வெளியேற வேண்டும் அப்படி எந்த வீரர் வெளியேறப்போகிறார் என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் இருவரும் அரை சதம் அடித்துள்ளனர்.