
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, அணிக்கு வந்த புதிதில் கபில் தேவுடன் ஒப்பிடப்பட்டவர். ஆனால் தொடர் காயங்கள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபிட்னெஸ் இல்லாததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்தார் பாண்டியா.
ஃபிட்னெஸில் கடுமையாக கவனம் செலுத்தி, காயங்களிலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். இந்த சீசனில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மட்டுமல்லாது, கேப்டன்சியிலும் அபாரமாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். ஒரு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவின் இணைவு இந்திய அணிக்கு வலுசேர்க்கும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக அசத்தும் முனைப்பில் தீவிர பயிற்சி செய்துவருகிறார் பாண்டியா.