யார் இந்த மார்க் சாப்மன்? - ரசிகர்களின் தேடலுக்கான விடை இதோ!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு வேறு நாடுகளுக்காக விளையாடி அரைசதம் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை நியூசிலாந்தின் மார்க் சாப்மன் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் முதல் ஓவரின் 3ஆவது பந்தில் டேரல் மிட்சலை ரன் எதுவும் அடிக்க விடாமல் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.
அதன் பின்னர் மூன்றாவது வீரராக இந்த தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்ட கேப்டன் கேன் வில்லியம்சன்-க்கு பதிலாக இளம் வீரர் மார்க் சாப்மன் களமிறங்கினார். முதல் சில பந்துகளில் பொறுமையாக நிதானத்தை கடைபிடித்து அதன் பின்னர் அதிரடியாக விளையாடி இந்திய அணியை அசைத்துப் பார்க்கும் படி ஒரு அற்புதமான இன்னிசை விளையாடினார்.
Trending
50 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என 63 ரன்கள் அடித்து அசத்தினார். அவரது இந்த ஆட்டத்தை பார்த்த பிறகு நியூசிலாந்து அணியில் இப்படி ஒரு வீரர் இருக்கிறாரா என்றே எண்ண தோன்றுகிறது. மேலும் அவர் யார் என்ற தேடலில் ஈடுபட்ட போது சில சுவாரசியமான விசயங்கள் இருப்பது தெரியவந்தது.
அதன்படி நியூசிலாந்தை சேர்ந்த தந்தைக்கும், ஹாங்காங்கைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் தான் இந்த சாப்மன். ஹாங்காங்-கில் பிறந்து அங்கேயே வளர்ந்த அவர் தனது இருபதாவது வயதில் ஹாங்காங் அணிக்காக 2014ஆம் ஆண்டு சர்வதேச டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளார்.
அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் தனது முதல் போட்டியிலேயே யூ.ஏ.இ அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ளார். இப்படி அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அங்கு தனது திறமைக்கான களம் பெரியது கிடையாது என்பதன் காரணமாக தனது தந்தையின் நாடான நியூசிலாந்திற்கு குடியேறி ஆக்லாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார்.
அவரது திறமையும் அனுபவமும் கண்ட நியூசிலாந்து அணி அவருக்கு நியூசிலாந்து அணிக்காக வாய்ப்பு அளித்தது. 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தகுதி பெற்ற அவர், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்துள்ளார்.
மேலும் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக இடம் பிடித்த அவர் பயிற்சி போட்டிகளில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக பிரதான ஆட்டங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வில்லியம்சன் ஓய்வில் இருப்பதால் இந்த டி20 தொடரில் விளையாட வாய்ப்பினை பெற்றுள்ளார்.
அப்படி இந்த தொடரில் கிடைத்த முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு எதிராக 63 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு நாடுகளில் விளையாடி அரைசதம் கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் சாப்மன் படைத்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
27 வயதான இந்த இளம் வீரர் 2014ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 31 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். அதேபோன்று 2015-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியுள்ள இவர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இவர் முதலில் ஹாங்காங் அணிக்காக அறிமுகமாகி தற்போது நியூசிலாந்து அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now