
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று ப்ளோரிடா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்களையும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் தற்போது கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த தங்களது அணியின் தோல்வி குறித்து பேசிய நிக்கோலஸ் பூரான், “இந்திய அணி தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். ஆனாலும் அவர்களை எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. அதே போன்று சேசிங்கின் போது எங்களது அணி வீரர்கள் யாரும் பெரிய பாட்னர்ஷிப் அமைக்கவில்லை. இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.