Advertisement

PAK vs AUS, 3rd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 25, 2022 • 17:18 PM
PAK vs AUS, 3rd Test: Australia register a historic victory in Pakistan
PAK vs AUS, 3rd Test: Australia register a historic victory in Pakistan (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முதலிரு போட்டிகளும் டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட், லாகூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன. 

Trending


இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதில் அபாரமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 104 ரன்களும் வார்னர் 51 ரன்களும் எடுத்தார்கள். இந்தத் தொடரில் உஸ்மான் கவாஜா 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையடுத்து 3ஆவது டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 31 ஓவர்களும் நாளை 90 ஓவர்களும் என மொத்தமாக இந்த இலக்கை அடைய பாகிஸ்தான் அணிக்கு 121 ஓவர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷஃபிக் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் கடைசி நாளான இன்று இமாம் உல் ஹக் 42 ரன்களுடனும், அப்துல்லா ஷஃபிக் 27 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் அப்துல்லா ஷஃபிக் மேற்கொண்டு ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அசார் அலியும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல் ஹக் அரைசதம் கடக்க, அவருடன் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாமும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.

பின்னர் 70 ரன்களில் இமாம் உல் ஹக்கும், 55 ரன்களில் பாபர் ஆசமும் நாதன் லையன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.

இதில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

மேலும் 24ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, முதல் தொடரைக் கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.

இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கவாஜா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement