
நடப்பாண்டு ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை நிதான மான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 14 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் பாபர் ஆசாம் அரைசதம் கடக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அகா சல்மானும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்த இஃப்திகார் அஹ்மது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.