
ஆசியக் கோப்பையை ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் நடத்துவதே, இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை மையப்படுத்திதான். இந்த இருநாடுகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு கிடைக்கும் வருவாய்தான், ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலுக்கான முக்கிய வருவாயாக இருக்கிறது. எனவே இந்த இரு அணிகளும் குறைந்தபட்சம் இரண்டு முறை மோதும்படியே அட்டவணை தயாரிக்கப்படும்!
இந்த முறையும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குறைந்தபட்சம் இரண்டுமுறை மோதம்படி ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் அட்டவணையை தயார் செய்திருந்தது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்தமுறை ஆசியக் கோப்பைத் தொடர் நடப்பதால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியிலும் மோதும் வாய்ப்பு அதிகம். இதனால் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தது.
இந்த நிலையில் இலங்கையில் ஒருபகுதியாக நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரில், யாரும் விரும்பாத அணியாக உள்ளே நுழைந்த மழை, எல்லோரையும் சேர்த்து மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் நாளை இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.