
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற ஆசிய கோப்பையின் 2ஆவது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை கடைசி ஓவர் வரை போராடி தோற்கடித்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய பவுலர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட அந்த அணிக்கு அதிக பட்சமாக முகமது ரிஸ்மான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களை எடுத்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாலும் 2ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களும் விராட் கோலி 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அந்த சமயத்தில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு 5வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். இருப்பினும் அவருடன் பார்ட்னர்ஷிப் போட்டு கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ஹர்திக் பாண்டியா அதிரடியாக 33 ரன்கள் குவித்து சூப்பரான பினிஷிங் கொடுத்தார்.