
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சூப்பர் 12 சுற்றில் இன்று க்ரூப் 2இல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கின்றன. இதில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் இந்தியாவிடம் கடைசி வரை போராடி, கடைசி பந்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாமின் கேப்டன்சி தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில், அந்த அணி இன்னுமும் தொடக்க வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மற்றபடி பந்துவீச்சில் ஷாஹீன், நசீம், ஹாரிஸ் ராவுஃப் என அசுரவேக பந்துவீச்சைக் கொண்டுள்ளது அந்த அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.