Advertisement
Advertisement
Advertisement

இந்தியாவை பாகிஸ்தான் மீண்டும் வீழ்த்தும் - ரஷித் லதீஃப்!

கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் பாகிஸ்தான் அணி வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லதீஃப் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 05, 2022 • 20:35 PM
'Pakistan will benefit from India's mistakes again': Rashid Latif's big claim ahead of Asia Cup enco
'Pakistan will benefit from India's mistakes again': Rashid Latif's big claim ahead of Asia Cup enco (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் பல்வேறு இருதரப்பு டி20 தொடர்களில் பங்கேற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த முறை விராட் கோலி தலைமையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடியது.

Trending


வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதைத்தொடர்ந்து ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது.

அதற்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசியாக கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இதே துபாய் மைதானத்தில் மோதிய போது பாகிஸ்தான் உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்தது.

வரலாற்றில் 7 ஆசிய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வென்றது.

அதனால் இந்த முறையும் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம், அணிகள் நிகழும் தேவையற்ற வீரர்கள் மாற்றம் போன்ற குளறுபடிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லதீப் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால் பாகிஸ்தானின் வியூகம் சிறப்பானதாக தோன்றுகிறது. டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நிகழ்த்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவை நீங்கள் பார்க்கும் போது இந்த வருடம் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் என்ற நிலைமை சீரற்ற சூழ்நிலையை காட்டுகிறது.

இந்திய அணியில் விராட் கோலி இல்லை. ரோஹித் சர்மா மற்றும் ராகுல் காயமடைகின்றனர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் போன்றவர்கள் கேப்டன்களாக செயல்படுகின்றனர். ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்படுகிறார். அந்த வகையில் அவர்கள் சிறந்த அணியை கட்டமைப்பதற்கே தடுமாறுகிறார்கள். இந்திய அணியில் தரமான வீரர்கள் உள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை வைத்து அவர்களால் உறுதியான சிறந்த 16 பேர் கொண்ட அணியை உருவாக்க முடியவில்லை.

அதனால் அவர்களுக்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியில் உருவாக்குவதிலும் பிரச்சனை ஏற்படும். கடந்த வருடம் இதுபோன்ற தவறுகளை அவர்கள் செய்ததாலேயே பாகிஸ்தான் வென்றது. எனவே இம்முறையும் அதே தவறை செய்யும் இந்தியாவின் குறையை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement