
இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கான நாள் நெருங்க நெருங்க, எப்பொழுதும் போட்டியைச் சுற்றி நிறைய விவாதங்களும் கருத்துகளும் வெளிவந்து கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிகப்படியான கருத்துக்கள் வெளிவரும். இந்த முறையும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல், பாகிஸ்தான் தரப்பிலிருந்து அதிக கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு முன்பாக, ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டி இலங்கையின் கண்டி மைதானத்தில் செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. இலங்கையில் வைத்து ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வென்று பாகிஸ்தான அணி ஆசியக் கோப்பைக்காக நாடு திரும்பி இருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருப்பதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.