
பாகிஸ்தானின் அணியின் இளம் வீரர் முகமது ஹஸ்னைன். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 8 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹஸ்னைன், கடந்த 2019இல் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியின்போது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். 19 வயதில் ஹாட்ரிக் எடுத்த சாதனை வீரர் என்ற பெருமையை அதன்மூலம் பெற்றார். பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக மட்டுமில்லாமல், பிரீமியர் லீக் போட்டிகளிலும் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.
தற்போது 21 வயதாகும் ஹஸ்னைன், நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசி அசத்தினார். இதேபோல் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் எதிரான ஆட்டத்தில் விளையாடியபோது அவரின் பந்துவீச்சு ஆக்ஷன் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக போட்டி நடுவர் ஜெரார்ட் அபூட் புகாரளித்தார்.
இதையடுத்து ஐசிசி உத்தரவின்பேரில் கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் அவரின் பந்துவீச்சு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட இருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹஸ்னைன் நாடு திரும்பியதை அடுத்து, லாகூரில் உள்ள ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தில் அவருக்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி நடந்த சோதனையில் பந்துவீச்சு ஆக்ஷன் விதிகளுக்கு மாறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.