
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த 17ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் நாளை முதல் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த தொடரின் மிக முக்கிய போட்டியாக ரசிகர்கள் பலராலும் பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 24ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டுமின்றி தற்போதே இந்த போட்டி குறித்த சுவாரசியமும் பெருகியுள்ளது. ஏற்கனவே உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரும் இந்திய அணி இம்முறையும் தங்களது ஆதிக்கத்தை தொடர நினைக்கும். அதே வேளையில் உலக கோப்பையில் இந்தியாவின் வெற்றிகரமான பயணத்தை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் அணியும் முயற்சிக்கும்.