
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.
நவிமும்பையில் உள்ள புகழ்பெற்ற டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக 2 அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை கடந்த வருடம் விளையாடிய கேஎல் ராகுல் விலகியதை அடுத்து அனுபவம் இல்லாத புதிய கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. இதுநாள் வரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அந்த அணி சமீப காலங்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்குக் கூட திண்டாடி வருகிறது. எனவே இந்த முறை மிக சிறப்பாக செயல்பட்டு குறைந்தபட்சம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த அணி களமிறங்க உள்ளதால் பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற போராட உள்ளது.