
ஐபிஎல் தொடரைப் போன்றே பாகிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
மொத்தம் 34 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 14 போட்டிகள் மட்டுமே நடைபெற்றது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளை ஜூன் 1ஆம் தேதி முதல் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் தற்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
இதையடுத்து ஐபிஎல் தொடரை போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து அதற்கான பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் பிஎஸ்எல் தொடரை அபுதாபியில் நடத்திக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் அபுதாபியில் உள்ள சேக் சயத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.