
இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை அனைத்து நாடுகளும் செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிப்பதற்கு ஐசிசி கெடு விதித்திருந்தது. அதை தொடர்ந்து இன்று மதியம் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் தங்களுடைய லட்சிய முதல் உலகக் கோப்பையை வெல்வதற்காக தென் ஆப்பிரிக்கா 15 பேர் கொண்ட கிரிக்கெட் அணியை வெளியிட்டது.
டெம்பா பவுமா தலைமை தாங்கும் அந்த அணியில் இதுவரை வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி ஆச்சரியப்படும் வகையில் தேர்வாகியுள்ளார். மற்றபடி குயின்டன் டீ காக், ரிசா ஹென்றிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்றிச் க்ளாஸென், ராஸ்ஸி வேன் டெர் டுசன், டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர வீரர்கள் பேட்டிங் துறையை வலுப்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் ரபாடா, நோர்ட்ஜெ, லுங்கி இங்கிடி ஆகிய நட்சத்திர வீரர்களும் சுழல் பந்து வீச்சு துறையில் கேசவ் மகாராஜ், மற்றும் தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர துவக்க வீரர் குயின்டன் டீ காக் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளார்.