அஜாஸ் படேலுக்கு ப்ளூ டிக் வழங்க வேண்டும் - அஸ்வின் கோரிக்கை!
ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அஜாஸ் படேலுக்கு ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் வழங்கப்பட வேண்டும் என அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.
இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கும், தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது.
Trending
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் அஜாஸ் படேல் 2011 முதல் உள்ளார். அவரை 13 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். 33 வயது அஜாஸ் படேல், நியூசிலாந்து அணிக்காக 11 டெஸ்டுகள், 7 டி20 ஆட்டங்களில் விளையாடியிருந்தாலும் ட்விட்டர் தளத்தில் அவருக்கு ப்ளூ டிக் இதுவரை வழங்கப்படவில்லை. (ஒவ்வொரு துறையில் உள்ள பிரபலங்கள், முக்கியமானவர்களுக்கு ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் வழங்கப்படுவது வழக்கம்.)
இந்நிலையில் இதை முன்வைத்து ட்விட்டரில் அஸ்வின் கூறியதாவது “ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுத்த அஜாஸ் படேல் நிச்சயம் (ப்ளூ டிக்) அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டியவர்” என்று ட்விட்டர் தளத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now