
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்தபோதெல்லாம் வியந்து பார்த்தோம். இப்போது டி20 கிரிக்கெட்டிலும் இரட்டைச் சதம் சாத்தியமாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் அட்லாண்டா ஓபன் என்கிற டி20 போட்டியில் பங்கேற்ற பிரபல வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரஹீம் கார்ன்வெல், இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார்.
அட்லாண்டா ஃபயர் அணியில் விளையாடும் கார்ன்வெல், 77 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 205 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் - 266.77. இதனால் அட்லாண்டா அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை விரட்ட முடியாமல் ஸ்கொயர் டிரைவ் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 29 வயது கார்ன்வெல் இன்னும் வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்குத் தேர்வாகவில்லை. ஆனால் இதுவரை 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.