
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் உச்சகட்ட பரபரப்பான போட்டியாக அமைந்தது பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி. இந்த சீசனில் மட்டுமல்லாது, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக அது அமைந்தது.
மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 189 ரன்களை குவிக்க, 190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஷுப்மன் கில்லின் அபாரமான பேட்டிங்கால் (59 பந்தில் 96 ரன்கள்) 19 ஓவரில் 171 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை பஞ்சாப் அணிக்காக வீசிய ஒடீன் ஸ்மித், முதல் பந்தை வைடாக வீசினார். மீண்டும் வீசிய முதல் பந்தை டேவிட் மில்லர் அடிக்காமல் விட்டதால், அந்த பந்தை வீணடிக்காமல் ஒரு ரன் ஓடினார். ஆனால் மறுமுனையிலிருந்து ஓடிவந்த ஹர்திக் பாண்டியாவால் பேட்டிங் க்ரீஸுக்கு வரமுடியவில்லை. பஞ்சாப் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து பாண்டியாவை ரன் அவுட் செய்தார்.