ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த பாபா சகோதரர்கள்!
சத்தீஸ்கருக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் சகோதரர்களான பாபா அபரஜித், பாபா இந்திரஜித் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள்.

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று தொடங்கிய ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு - சத்தீஸ்கர் அணிகள் விளையாடி வருகின்றன. இதற்கு முன்பு டெல்லிக்கு எதிராக விளையாடி டிரா செய்த தமிழக அணி, 3 புள்ளிகளைப் பெற்றது. முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற சத்தீஸ்கர் அணி 6 புள்ளிகளைப் பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான கெளசிக் காந்தி 27 ரன்களிலும் சூர்யபிரகாஷ் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த சகோதரர்களான பாபா அபரஜித் - பாபா இந்திரஜித் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்தார்கள்.
இந்திரஜித் மீண்டும் சதமடித்து 141 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் விஜய் சங்கர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி, 86 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்துள்ளது. பாபா அபரஜித் 101 ரன்களும் ஷாருக் கான் 28 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now