ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த ரஹானே!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தினார்.
ரஞ்சி கோப்பைப் போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. ஆமதாபாத்தில் மும்பை - செளராஷ்டிர ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. பிருத்வி ஷா தலைமையிலான அணியில் ரஹானேவும் உனாட்கட் தலைமையிலான அணியில் புஜாராவும் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் பல போட்டிகளாக மோசமாக விளையாடி வருகிறார்கள். 2018 டிசம்பரிலும் 2019 ஜனவரியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்டுகளில் சதங்கள் அடித்தார் புஜாரா. அவ்வளவுதான். 2019 ஜனவரிக்குப் பிறகு இன்று வரை புஜாரா ஒரு சதமும் எடுக்கவில்லை.
Trending
ரஹானே இதைவிடவும் மோசம். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார்.
புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் 33 வயதுதான். அதனால் இருவரும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் அருமையான வீரர்கள். இருவரும் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடி நிறைய ரன்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன் என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி சமீபத்தில் பேட்டியளித்தார்.
இந்நிலையில் செளராஷ்டிரத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் ரஹானே சதமடித்துள்ளார். ரஞ்சி போட்டியில் விளையாடி தனது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ரஹானே, இன்றைய ஆட்டத்தில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இன்றைய போட்டியில் 109 பந்துகளில் அரை சதத்தை எடுத்த ரஹானே, 211 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.
ரஞ்சி போட்டியில் சதமடித்துள்ளதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே மீண்டும் இடம்பிடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now