
பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கராச்சியில் கடந்த 12ஆம் தேதியில் இருந்து நேற்று வரை நடைபெற்றது. இந்த டெஸ்டில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி 2ஆவது இன்னிங்சில் சதம் அடிக்க, போட்டி டிராவில் முடிந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 97 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மொத்தமாக ஆஸ்திரேலியா 505 ரன்கள் முன்னிலை பெற்றதால் பாகிஸ்தானுக்கு 506 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எப்படியும் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் என கிரிக்கெட் வல்லுனர்கள் எண்ணினர்.
பாகிஸ்தான் அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு அப்துல்லா ஷஃபிக் உடன் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. குறிப்பாக பாபர் அசாம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.