
இந்திய அணியில் முன்னாள் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஐசிசி தொடரை வெல்லவில்லை என்று குறை மட்டுமே உள்ளது.
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் தனது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி அயல்நாட்டு மண்ணில் வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் இருமுறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதோடு வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் வெற்றியினை பதித்தது. இப்படி ஒரு சிறப்பான பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரியால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்பது வருத்தம் தான்.
இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ரவிசாஸ்திரி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது அவர் மீண்டும் தனது பழைய வேலைக்கு திரும்பியுள்ளார். அதாவது வர்ணனையாளராக செயல்படவுள்ளார் என்று தெரிகிறது.