
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவி சாஸ்திரி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் அவரின் பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்திய அணிக்கு இதற்கு முன்னதாக அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அவருடன் கோலிக்கு சரியான புரிதல் ஏற்படவில்லை. ஆனால் அடுத்து வந்த ரவிசாஸ்திரியுடன் கோலி நல்ல காம்போவாக மாறிவிட்டார். இதற்கு உதாரணம், கடந்த 2019ம் ஆண்டு ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட அவரையே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்க வேண்டும் என கோலி பரிந்துரைத்தார்.