கடந்த 2017-ல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. வெளிநாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வென்றது.
ஒரே குறை, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியால் உலகக் கோப்பைப் போட்டியை வெல்ல முடியவில்லை. 2014-16 காலகட்டத்தில் இந்திய அணியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாகப் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளார் ரவி சாஸ்திரி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்.எல்.சி. தொடரின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எல்.எல்.சி. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்பார்கள்.