அர்ஷ்தீப் சிங் நிச்சய டி20 உலகக்கோப்பை விளையாட வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பையில் அர்ஷ்தீப் சிங்கை ஆடவைப்பதற்காக யாரை வேண்டுமானாலும் வெளியே உட்காரவைக்கலாம் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு அமீரகத்தில் தவறவிட்ட டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியாவில் தூக்கவேண்டும் என்ற உறுதியில் இருக்கிறது இந்திய அணி.
இந்த முறை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்தவர் ரோஹித் சர்மா. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் ரோஹித்.
Trending
ரோஹித் சர்மா தலைமையிலான டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. விராட் கோலி ஃபார்மில் இல்லாத நிலையில், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதேபோல பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் தவிர, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்களுக்கு இடையேயும் போட்டி நிலவுகிறது. எனவே டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி எதுவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், 23 வயதே ஆன அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு பெருகிவருகிறது. இடது கை ஃபாஸ்ட் பவுலரான அவரை கண்டிப்பாக அணியில் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்திவருகின்றனர். அந்தளவிற்கு அர்ஷ்தீப் சிங் அருமையாக பந்துவீசிவருகிறார்.
ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 6 டி20 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங், துல்லியமான யார்க்கர்களை வீசுவதால் அர்ஷ்தீப் டெத் ஓவர்களில் ஜொலிக்கிறார். இதுவரை அவர் ஆடியதில் டி20 கிரிக்கெட்டில் அவரது பவுலிங் சராசரி 12.55, ஸ்டிரைக் ரேட் 12.4 மற்றும் எகானமி ரேட் 6.05 ஆகும்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் தான், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்த்தால் நல்ல வெரைட்டி கிடைக்கும். அதனால் அவரை ஆடவைக்க வேண்டும் என்பதற்காக நானாக இருந்தால், யாரை வேண்டுமானாலும் வெளியே உட்காரவைப்பேன். 3 வலது கை ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஒரு இடது கை ஃபாஸ்ட் பவுலர் இருந்தே ஆகவேண்டும். அது அர்ஷ்தீப் சிங் தான்.
புவனேஷ்வர் குமார், பும்ரா கண்டிப்பாக அணியில் இருப்பார்கள். ஷமியும் இருப்பார். ஆஸ்திரேலியாவில் இடது கை ஃபாஸ்ட் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் பவுன்ஸுக்கு அர்ஷ்தீப் சிங்கின் ஆங்கிளுக்கு அவர் சிறப்பாக செயல்படுவார். எனவே டி20 உலக கோப்பையில் அர்ஷ்தீப் கண்டிப்பாக ஆடவேண்டும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now