
இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர்கள் டாம் லேதம் (95) மற்றும் வில் யங் (89) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
49 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 51 ரன்களுக்கே கில் (1), மயன்க் அகர்வால் (17), புஜாரா (22), ரஹானே (4), ஜடேஜா (0) ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (65), அஷ்வின் (32) மற்றும் ரிதிமான் சஹா (61) ஆகியோர் பொறுப்புடன் ஆடியதால், 7 விக்கெட்டுக்கு மேல் இந்திய அணி இழக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் 234 ரன்கள் அடித்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்றதால் 283 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 284 ரன்களை நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது.