
நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன் ஜடேஜா கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்து, புள்ளி பட்டியலில் தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது.
கேப்டனாக செயல்படுவதால் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டம் கடுமையாக பாதித்தது. நடப்பு சீசனில் 10 போட்டியில் விளையாடியுள்ள ஜடேஜா, 116 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். சராசரி 19 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 118 ஆகும். ஜடேஜா நடப்பு சீசனில் அதிகபட்சமாக 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதே போன்று பந்துவீச்சிலும் ஜடேஜா 10 போட்டியில் விளையாடி 5 விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார்.
இதனிடையே ஜடேஜாவுக்கு சுதந்திரமாக கேப்டனாக செயல்பட சிஎஸ்கே அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஜடேஜா, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அன்மையில் அறிவித்தார். இதனையடுத்து புதிய கேப்டனாக மீண்டும் தோனியே அணிக்கு திரும்பினார். அப்போது பேசிய தோனி, ஜடேஜாவுக்கு கேப்டன்ஷி அழுத்தத்தை கையாள முடியவில்லை என்று குறை கூறினார்.