
காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப் பட்டுள்ளது. அதில் இந்தியா, இங்கிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற லீக் போட்டிகள் கடந்த ஜூலை 29 இல் துவங்கி நடைபெற்ற நிலையில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அதைத்தொடர்ந்து இன்று மதியம் 3.30 மணிக்கு எட்ஜ்பஸ்டன் நகரில் துவங்கிய முதல் அரையிறுதிப் போட்டியில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட அவருடன் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஷபாலி வர்மா 76 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 15 ரன்களில் அவுட்டானார்.
அடுத்த ஓவரிலேயே 8 பவுண்டரி 3 சிக்சருடன் 61 ரன்களை வெளுத்து வாங்கி ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்களிலும் தீப்தி சர்மா 22 ரன்களிலும் போராடி ஆட்டமிழந்தனர். இருப்பினும் 3ஆவது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்கஸ் 7 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் இந்தியா 20 ஓவர்களில் 164/5 ரன்கள் எடுத்தது.